சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
பன்னிரெண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
9. கறைக் கண்டன் சருக்கம்
9.1 கணம்புல்ல நாயனார் புராணம்
4060
திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி
பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி.
1
4061
அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த
எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்
ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்
மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார்.
2
4062
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து
நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத்
தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்.
3
4063
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க
இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில்.
4
4064
ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து
மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார்.
5
4065
இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள்
மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார்
அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார்.
6
4066
முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை
என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார்.
7
4067
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார்.
8
4068
மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப்
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி
வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம்.
9
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

9.2 காரி நாயனார் புராணம்
4069
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்.
1
4070
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி
கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்.
2
4071
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத்
தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்.
3
4072
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.
4
4073
வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.
5
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

9.3 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்
4074
தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால்.
1
4075
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து
சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட
பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார்.
2
4076
ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார்.
3
4077
எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர்
படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக.
4
4078
வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்
வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச்
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க.
5
4079
தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல்
தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி
போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப்
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க.
6
4080
இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில்
பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.
7
4081
வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார்
களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார்.
8
4082
திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார்
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார்.
9
4083
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந்
தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப்
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத்
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம்.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

9.4 வாயிலார் நாயனார் புராணம்
4084
சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெரும் குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயிலா புரி.
1
4085
நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத்
தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என
ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி
மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால்.
2
4086
காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும்
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா
சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம்.
3
4087
தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத்
துவள் பதாகை நுழைந்து அணை தூமதி
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால்.
4
4088
வீதி எங்கும் விழா அணிக் காளையர்
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர்
ஓதி எங்கும் ஒழியா அணிநிதி
பூதி எங்கும் புனை மணிமாடங்கள்.
5
4089
மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்.
6
4090
வாயிலார் என நீடிய மாக்குடித்
தூய மா மரபின் முதல் தோன்றியே
நயனார் திருத்தொண்டின் நயப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்.
7
4091
மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.
8
4092
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும்
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே
திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப்
புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார்.
9
4093
நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச்
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

9.5 முனையடுவார் நாயனார் புராணம்
4094
மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர்.
1
4095
விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும்
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார்.
2
4096
மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார்.
3
4097
இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்.
4
4098
மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார்.
5
4099
யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.
6
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
4100
செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க
பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.
7
திருச்சிற்றம்பலம்
கறைக் கண்டன் சருக்கம் முற்றிற்று.

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com